×

அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மையம் தொடக்கம்

சென்னை: இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மையம் அப்போலோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மேம்பட்ட மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையமானது திறமையான, நிபுணத்துவமிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவால் செயல்படுத்தப்படுவதுடன், செரிமான மண்டலத்தின் கோளாறுகள் தொடர்பாக விரைந்து நோயை கண்டறியும் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் உயர்தர சிகிச்சையை அளிப்பதற்காக அதிநவீன உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்படும்.

மேலும் இதன் மூலம் உணவு குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை, பித்த சுரப்பிகள் அமைப்பு தொடர்பான பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதுகுறித்து மருத்துவர் பழனிச்சாமி கூறுகையில், ‘‘ஒரு சில இரைப்பை குடல் ரத்தப் போக்கு கோளாறுகளில் அவை உயிருக்கே ஆபத்தானவையாக இருக்கக் கூடும் என்பதால் அனைத்து வகை நோயாளிகளும் சிகிச்சைக்காக வரும் போது தொடக்கத்திலேயே தீவிரமாக பரிசோதிக்கப்பட வேண்டும்.

இந்த மையம் ரத்த வங்கி, பரிசோதனை கூடங்கள், கதிரியக்க ஆய்வு நிபுணர்கள் குழு ஆகியவற்றுடன் இணைந்து அதிநவீன சிகிச்சையை அளிக்கிறது. இரைப்பை குடல் ரத்தப் போக்கு என்பது செரிமானக் கோளாறு, வயிற்றுப் புண்கள், புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளாகும். இரைப்பை குடல் ரத்தப் போக்கு கோளாறு காரணமாக இறப்பு விகிதம் 10% ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முறையான சிறப்பு சிகிச்சை அளிக்கும் மையங்கள் இருந்தால், இதை 50%க்கும் அதிகமாக குறைக்க இயலும் என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன’’ என்றார்.

The post அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மையம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Gastrointestinal Bleeding Treatment Center ,Apollo Hospitals ,Chennai ,Apollo ,Hospital ,
× RELATED இந்தியாவில் முதன்முறையாக குடல்...